Saturday, May 24, 2008

யாழ் மாநகர சபை -நல்லூர் உற்சவ கவிதை 1995

கவிதை தலைப்பு :நல்லூரின் வீதியிலே
கவிதை எழுதிய திகதி :21 08.1995

நல்லூரின் வீதியிலே நடந்தவைதான் எத்தனையோ
பல்லூரின் மக்கள் இங்கு பழி கிடந்த கதை அறியோ
கொல்லூர்த்தி கணைகள் இங்கு கூவி வரும் வேளையிலும்
நல்லூரின் வாசலிலே நம் கிடந்த நாள் இல்லையோ ?

ஈகத்தின் கோவில் அவன் இமை போலும் திலீபன் அவன்
பாகத்தை பிரித்த்க் கொடு பாவிநீ வெளியேறு என
சாகக் கிடந்த நாட்கள் அதை தமிழர் நாம் மறப்போமா
சோகத்தின் எல்லை அது சோதனையின் காலம்அது !

ஆமி அவன் வெளிக்கிட்டு ஆக்கினைகள் செய்கையிலே
சாமி நீ கதி என்று சரண் புகுந்த இடம் எதுவோ?
பூமியதிர் குண்டுகளால் புதுமனைகள் உடைகையிலும்
காமி ஓர் இடம் என்று காத்து விட்ட கால் எதுவோ

கும்பிடும் வேளையிலும் குளிர் களி தனை எண்ணி
வெம்பிடும் தம்பியரை வேறு இடம் காட்டி வந்து
கம்பி நீட்டி சென்றிடுக காசுதனை காப்பாத்த
நம்பி அந்த நாள் எல்லாம் நல்லூரின் வீதியிலே

புரண்டு செய்த புரதட்டை எத்தனை
புழுதி அளைந்த புளுகங்கள் எத்தனை
திரண்டு இழுத்த தேர் வடம் எத்தனை
திரிந்து மகிழ்ந்த்தெருக்களும் எத்தனை
வெருண்டு ஓடிடும் வேளையில் காத்திடும்
வேலது செய்திடும் விளையாட்டு எத்தனை
புரண்டு ஓடும் புரியா ஓர் இன்பத்தில்
புகழ்ந்து பாடிய புதுக் கவி எத்தனை

ஆடியதும் அகவியதும் மயிலோ அயிலோ
ஆடுவதும் பாடுவதும் அழகோ அருளோ
நாடியதும் நல்கியதும் நன்றோ இன்றோ
நடந்த துவும் கிடந்ததுவும் நல்லூர் தெருவோ
தேடியதும் தெளிந்ததுவும் தென்போ அன்போ
தெரு மீது திரிந்ததனால் திகழும் புகழோ
பாடியதும் பணிந்ததுவும் பதமோ இதமோ
பலபேரை பணி கொண்ட விதமோ சுகமோ ?


நல்லூரின் வீதியிலே நடந்ததெல்லாம் நினைந்துவிட
கல்லூர் மனம் கூட கசிந்துவிடும் - உள்ளூர
அன்பு வரும் அழுகை வரும் ஆனந்த கூத் து வரும்
பண்போடு நாம் நடந்த பயன்

நான் என்ற அகங்காரம் தனை நீக்கி நம்முடலின்
ஊன் தின்ற அரக்கர்களை ஒழித்திடுவாய்- தேனோடு
திணை மாவும் திருவருளும் திகழ்ந்திங்கு அமுதூட்டும்
இணைப பாதம் என்றும் துணை

குண்டொலி கேட்டதும் குலை நடுங்கி உயிர் ஒடுங்கி
கண்டுனை கைக்கொள்ள கரம் குவித்தோம் - பண்பாடும்
நல்லூரின் வீதியிலே நடமாடும் முருகா எம்
கல்விக்கு நீ வழி காட்டு

பங்கு என்றும் பகை என்றும் படையாலே அடி வாங்கும்
எங்களின் நிலை இங்கு எது தானோ - மங்கு புகழ்
சா வொன்றே கதிஆன சரித்திரங்கள் தனை மாற்றி
சா வென்ற நிலையை நீ தா !

நல்லூரின் வீதியிலே நனைத்த அருள் மழையினிலே
எல்லோரும் இன்புற்ற வேளையிலே - சொல்லூரும்
தேன் தமிழ் பாக்களினால் செய்துவிட்டேன் ஒருகவியை
வீண் வேலை என்னாதே விரைந்து !

வணக்கம்

3 comments:

அருண்மொழிவர்மன் said...

எப்போ எழுதினாய் என்று தெரியவில்லை.... ஏனென்றால் இதே காலப்பகுதியில் நாம் ஒன்றாக் படித்தவர்கள். அப்பொது இருந்த சூழ்நிலை அப்படி. நன்றாக உள்ளது... ஆனாலும் உனது காதல் பிரார்த்தனை கவிதைகளுக்குத்தான் நான் தீராத ரசிகன்.

ஒரு வேண்டுதல், பின்னூட்டமிடும் போது word verification ஐ நீக்கிவிட்டால் பின்னுட்டமிட இலகுவாக் இருக்கும்

K.Guruparan said...

Thanks suthan
How to eliminate the word verification.

K.Guruparan said...

This was written 1994 nallur temple festival period